நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

09 September 2012

மொபைல் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யும் சில வழிமுறைகள்

mobile battery

மனிதனும், மொபைலும் பிரிக்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. அதனிடம் அடிமைபட்டு கிடக்கும் காலம் வெகுவிரைவில் இல்லை என்று கூட சொல்லலாம்...  அப்படிப்பட்ட மொபைலுக்கு உயிர்நாடி என்று சொன்னால் அது பேட்டரி தான். அத்தகைய பேட்டரியை நாம் சரிவர பராமரிக்காவிட்டால் பேட்டரியின் ஆயுட்காலம் குறைந்து மிக விரைவில் அது தன் செயல் திறனை இழந்து விடும். பேட்டரியின் ஆயுட்காலத்தை கூட்ட சில யோசனைகள்:
  • புதிய மொபைல் வாங்கும்போதோ அல்லது புதிய பேட்டரி வாங்கும் போதோ முதலில் 8 மணி நேரம் சார்ஜ் செய்வது மிகவும் அவசியம் 1 மணி அல்லது 2 மணியில் பேட்டரி புல் என காட்டினாலும் சார்ஜ்செய்வதை நிறுத்தாதீர்கள் 8 மணிநேரம் முடிந்த பின்பே சார்ஜரை நீக்குங்கள் .
  • முதல் சார்ஜிக்கு பிறகு எப்போது மொபைல் “பேட்டரி Low “ என காட்டுகிறதோ அப்போதுதான் சார்ஜ்செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஒரு பாயின்ட் அல்லது இரண்டு பாயின்ட் குறைந்தாலோ உடனே சார்ஜ் செய்ய ஆரம்பிக்க கூடாது 
  • மொபைலின் பேட்டரி mAh (Milliamp Hours) 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரியா என சோதித்து பார்த்து வாங்குங்கள். ஏனெனில் ஆடியோ, வீடியோ, இணையவசதி உள்ள மல்ட்டிமீடியா மொபைலுக்கு mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய பேட்டரி தேவை.
  • இரவு நேரங்களில் மொபைலை சார்ஜரில் போட்டுவிட்டு காலையில் எடுக்கும் வழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் இப்படி சார்ஜ் செய்வதால் உங்களது பேட்டரி விரைவில் பருத்து, பின் பயன்படாமல் போகும்.
  • புளூடூத் வசதி, வை-பை வசதி மற்றும் இணைய வசதியை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள் மற்ற நேரங்களில் அணைத்து வைப்பதே சிறந்தது. எப்போதும் திறந்தே வைத்திருந்தால் பேட்டரியின் திறன் குறைந்து கொண்டே வரும்
  • ரிங்டோனுக்கு முழு பாட்டையும் வைக்காமல் “கட்சாங்ஸ்” எனப்படும் குறுகிய பாடல்களையே ரிங்டோனாக வைத்தால் பேட்டரியின் திறன் அதிகமாக செலவழிக்கப்படுவது தவிற்கப்படும்
  • மொபைலை FM ரேடியா போல் எப்போதும் பாடல்களை பாட விடாதீர்கள். 
  • உங்களது மொபைலின் திரை வெளிச்சத்தை குறைத்து வையுங்கள் அனேகமாக அனைத்து மொபைல்களிலும் பவர்சேவர்மோட்(PowerSaverMode) இருக்கும் அதை ஆக்டிவேட்(Activate) செய்யுங்கள் இதனால் உங்களது பேட்டரி நீண்ட காலத்திற்கு வரும்.
  • வால்பேப்பர் மற்றும் ஸ்கீரின்சேவர்களில் பிக்ஸ்ல்கள்(Pixels) அதிகமுடைய படங்களை வைக்காதீர்கள் இதனால் பேட்டரி சார்ஜ் விரைவில் தீரும்
  • அதிக வெப்பமுள்ள இடங்களில் மொபைலையோ, பேட்டரியையோ வைக்காதீர்க்கள். இதனால் உங்களது பேட்டரி திறன் குறையக்கூடும்
  • கூடுமான வரையில் கம்பெனிகளின் ஒரிஜினல் பேட்டரிகளையே வாங்குங்கள். 30 ரூபாயில் கிடைக்கிறது, 40 ருபாயில் கிடைக்கிறது என்று மலிவான, தரமற்ற பேட்டரிகளை வாங்காதீர்கள் இத்தகைய பேட்டரிகள் வெடித்து உங்களுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போல கம்பெனிகளின் ஒரிஜனல் சார்ஜர்களையே பயன்படுத்துங்கள் இதனால் ஏற்படும் மின் விபத்துக்களையும் தவிர்க்க முடியும்.
இன்றைய சிந்தனை கார்னர்: நாம் முடிந்த அளவு ஒரு மரத்தினையாவது நடுவோம்,, அப்படியும் முடியாவிட்டால் இருக்கும் மரத்தினையாவது வெட்டாமல் இருப்போம்....

இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்....

30 August 2012

கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு -இன்று ஆல்பர்ட் ஐஸ்ட்டீன்

albert einstein
Albert Einstein
1945ம் ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி. உலக வரலாற்றில் ஒரு கறுப்பு தினம். அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று ஐப்பானில் அணுகுண்டு வீச சின்னாபின்னமானது ஹிரோஷிமா. மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத் தாங்கி சுக்கல் சுக்கலாகக் கிழிந்தது நாகாசாகி. ஆயிரமாயிரம் அப்பாவி உயிர்கள் அநியாயமாகப் பலியான அந்தச் செய்தி கேட்டு நாள் முழுவதும் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மியழுதது ஓர் உள்ளம். காரணம் அந்த ஜீவன் கண்டுபிடித்துச் சொன்ன சார்பியல் கோட்பாடுதான் அணுகுண்டு உற்பத்தியாவதற்கு அடிப்படையாக இருந்தது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நன்மைக்காகவே பயன்பட வேண்டும் என்று நம்பிய அவர்தான் இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

1879ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி ஜெர்மனியில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார் ஐன்ஸ்டைன். அவர் பிறப்பிலேயே ஓர் மேதை கிடையாது. உண்மையில் அவர் மூன்று வயது வரை பேசாததால் அவருக்குக் கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர். வகுப்பிலும் அவர் சராசரி மாணவராகத்தான் இருந்தார்.

அவருக்கு அறிவியல் மீது ஆர்வம் பிறந்த போது நான்கு வயது. ஒருமுறை அவருக்கு compass எனப்படும் திசை காட்டியைப் பரிசாகத் தந்தார் அவரது தந்தை. அதன் உள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகை நோக்கி ஈர்த்தது.

பள்ளியில் சொந்தமாகவே calculus என்ற கணிதக் கூறைக் கற்றுக் கொண்டார் ஐன்ஸ்டைன். பின்னர் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார். அவரது கேள்விகளுக்குப் பதில் தர முடியாமல் ஆசிரியர்கள் திகைத்ததாகவும் அடுத்து என்ன கேட்கப் போகிறார் என்று அஞ்சியதாகவும் ஒரு குறிப்பு கூறுகிறது.

சிறு வயதிலிருந்தே வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக் காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன். அவருக்கு வயலின் வாசிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. இசை மேதை மோசாட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்குத் திறமை இருந்தது.

அவருக்குப் பதினைந்து வயதான போது இத்தாலியின் மிலான் நகருக்கு அவர்கள் குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துப் போனதும் ஸ்விட்சர்லந்துக்குச் சென்றார் ஐன்ஸ்டைன். புகழ் பெற்ற Swiss Federal Polytechnic நுழைவுத் தேர்வில் அவர் தோல்வியடைந்தார். ஆனால் அடுத்த ஆண்டு அவரைச் சேர்த்துக் கொண்டது அந்தப் பலதுறைத் தொழிற் கல்லூரி. அதிலிருந்து தேர்ச்சி பெற்றதும் ஸ்விஸ் குடியுரிமை பெற்றார் ஐன்ஸ்டைன்.

அவருக்குக் கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்களை பதிவு செய்து அவற்றை ஆராய்வது. அந்த வேலையில் அதிக ஓய்வு நேரம் இருந்ததால் அவர் சொந்தமாகப் பல ஆராய்ச்சிகளைச் செய்ய உதவியாக இருந்தது. ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதத் தொடங்கினார். 1905ம் ஆண்டு Zurichபல்கலைக் கழகத்தில் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 

கண்ணுக்குப் புலப்படாத அணுவைப் பற்றியும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பற்றியும் ஆராய்ந்த ஐன்ஸ்டைன் Theory of Relativity என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதுதான் சார்பியல் கோட்பாடு. அந்தக் கோட்பாடு மூலம் அவர் உவகுக்குத் தந்த புகழ்பெற்ற கணித இயற்பியல் வாய்ப்பாடுதான் E = mc(square). விஞ்ஞான உலகத்திற்கே அது ஒரு அடிப்படை மந்திரமாகக் கருதப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பைச் செய்த போது அப்போது அவருக்கு வயது 26தான்.

1921ம் ஆண்டு அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்க விரும்பியது நோபல் குழு. ஆனால் சார்பியல் கோட்பாடு குறித்து அப்போது விஞ்ஞானிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்காக அல்லாமல் photo electric effect என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முதலாம் உலகப் போரில் ஜெர்மனி கலந்து கொண்டதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டைன். பின்னர் ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த போது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வரும் என்று உணர்ந்த அவர் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்.

1939ம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார் ஐன்¢ஸ்டைன். அப்போது ஹிட்லரின் ஆட்சியில் இருந்த ஜெர்மனிக்கு அணுகுண்டைத் தயாரிக்கும் வல்லமை இருப்பதாகவும் வெகுவிரைவில் அணுகுண்டைத் தயாரிக்கக் கூடும் என்றும் அதில் எச்சரித்திருந்தார் ஐன்ஸ்டைன். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாயிற்று. ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டைன். ஆனால் ரூஸ்வெல்ட் நிர்வாகமோ ஐன்ஸ்டைனுக்குத் தெரியாமலேயே சொந்தமாக அணுகுண்டைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. அதன் விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உலக வரலாற்றை ஒரு கணம் இருட்டடிப்பு செய்த நாகாசாசி ஹிரோஷிமா சம்பவம்.

E = mc(square) என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது. அந்தத் தவிப்பு இறப்பு வரை ஐன்ஸ்டைனை உறுத்தியிருக்கும். ஆனால் அந்த ஒரு கறுப்புப் புள்ளியைத் தவிர்த்து ஐன்ஸ்டைனின் கோட்பாட்டால் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறது உலகம். உண்மையில் சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகள் பைபளின் பழைய ஏற்பாடு மாதிரி என்றால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு பைபளின் புதிய ஏற்பாடு மாதிரி என ஓர் ஒப்பீடு கூறுகிறது.

தங்கள் இனத்தவர் என்று பெருமைப்பட்ட இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும் படி ஐன்ஸ்டைனுக்கு அழைப்பு விடுத்தது. நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்தப் பதவியை ஏற்க மறுத்து விட்டார் ஐன்ஸ்டைன்.

ஸ்விட்சர்லாந்தில் பயிலும் போது மிலவா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார் ஐன்ஸ்டைன். இரு பிள்ளைகளுக்குத் தந்தையானார். பின் மணமுறிவு ஏற்படவே எல்சா என்ற உறவுப் பெண்ணை மணந்து கொண்டார். எல்சா சிறிது காலத்திலேயே இறந்து விட சுமார் இருபது ஆண்டுகள் தனித்தே வாழ்ந்தார் ஐன்ஸ்டைன்.

அணுகுண்டு தயாரிப்பதற்கு அவருடைய சார்பியல் கோட்பாடுதான் அடிப்படை என்றாலும் யுத்தங்களை அறவே வெறுத்தவர் ஐன்ஸ்டைன். உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த அவர் 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி தனது 76வது வயதில் காலமானார்.

நவீன அறிவியல் ஐன்ஸ்டைனுக்கு மிகப் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எதையுமே ஆழமாகச் சிந்திக்கக் கூடியவர் அவர். ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் என்று ஒருவர் கேட்க, 
கடவுள் இந்த உலகை எப்படிப் படைத்தார் என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்து விட வேண்டும் என்று கூறினாராம்
 ஐன்ஸ்டைன்.  அவருக்கு வானம் வசப்பட்டதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஆழமான சிந்தனை. மற்றது அறியப்படாதவற்றைப் பற்றிய அளவிட முடியாத தாகம். அந்த ஆழமான சிந்தனையும் இயற்கையைப் பற்றிய தாகமும் நமக்கு இருந்தால் நமக்கும் அந்த வானம் வசப்படும்

நன்றி: வானம் வசப்படும் அழகிய பாண்டியன்

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்....

26 August 2012

சாதனை மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்



நீல் ஆம்ஸ்ட்ராங்கின் முழு பெயர் நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 1930-ம் ஆண்டில் ஆகஸ்டு 5-ந்தேதி ஒகயோவில் உள்ள வபாகொனெட்டாவில் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆடிட்டராக பணிபுரிந்தார். எனவே அவர் பல இடங்களுக்கு சென்று பணிபுரிந்தார். ஆகவே இவர் வபாகொனெட்டாவில் உள்ள தனது தாத்தா, பாட்டியுடன் தங்கியிருந்தார். அவர்களுடன் குழந்தை பருவத்தை கழித்தார்.


19 August 2012

பெருநாள் நல்வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும்! 

முப்பது நாட்களும் நோன்பு நோற்கக்கூடிய
உடல் சுகத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்நன்நாளில்... 


நோன்பிருந்தவர்கள் அனைவரும் ஏழை
எளியவருக்கு பித்ரா என்னும் தானதர்மங்களை
வழங்கி மகிழ்ச்சியுறுவோம்..

நம்முடைய ஜகாத் என்னும் தர்மத்தை முறைப்படி
ஏழை எளியவர்களுக்கு வழங்குவோம்....
சந்தோஷமான இந்த நன்நாளின் மகிழ்ச்சியை
உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்...
உலகத்தில் பல பகுதிகளில் வாழும் என் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த 
பெருநாள் நல்வாழ்த்துக்கள்
.....
இந்த வருடம் போல் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வருடங்களிலும் ரமலானை நோன்பை சிறப்பான முறையில் நோற்கக்கூடிய பாக்கியத்தையும், நீண்ட‌ ஆயுளையும், பூரண சுகத்தையும் நம் அனைவருக்கும் தரவேண்டுமென இந்நன்னாளில் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்...

                                                                 **************


இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...