கடலூர் மாவட்டம், புதுச்சேரி மக்களுக்கு கடந்த வருடம் சோகமாகவே நிறைவு பெற்றுள்ளது. இதற்கு காரணம் தானே பேயாட்டம் ஆடியதே... தானே புயல் கடலூர் மற்றும் புதுச்சேரியை சின்னபின்னமாக ஆக்கி இருக்கும் இந்த தருணத்தில் புயலுக்கு யார், எங்கு பெயர் வைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்...
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன் முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள்.
1950- ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியது. இதையடுத்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது.
அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய மண்டலத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த மண்டலத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மா, ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன.
கடந்த 2004- ஆம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 5 முறை புயல் ஏற்பட்டது. அந்தப் புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை தாய்லாந்து, கிரி பெயரை வங்கதேசம், ஜல் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன.
இதில் லைலா, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. 2011- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்தப் புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறி வைத்து வந்த இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்து தானே என்ற பெயர் தேர்வு செய்து சூட்டப்பட்டுள்ளது.
இந்த தானே பெயரை வழங்கியது மியான்மா நாடாகும். இந்த வரிசையில் அடுத்தடுத்து வரும் புயல்களுக்கு முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா) என்று பெயர்கள் சூட்டப்பட உள்ளன.
2 comments:
தகவல் பகிர்விற்கு நன்றி !
அனைவரும் தெரிந்து கொள்ள துடிக்கும் ஒரு விஷயம் இது.
நல்ல பதிவு.
ரொம்ப நன்றி சகோதரி ஸ்ரவாணி அவர்களே..
Post a Comment
அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....