தமிழகம் முழுவதும் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வினாத்தாள் வெளியானதாக வந்த தகவலை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலும், ஈரோடு மாவட்டத்திலும் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் வெளியானதாக தேர்வு எழுதியவர்கள் புகார் கூறினார்கள்.
கம்பைநல்லூரில் சுரேஷ் குமார் என்பவர் ரூ. 3 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்த தகவலையொட்டி 5 பேர் சிக்கியுள்ளனர். இதேபோல ஈரோட்டில் ஒரு பெண் கேள்வித்தாளை தேர்வுக்கு முன்னதாக வைத்திருந்ததாக தேர்வர்கள் புகார் கூறினர். இந்த 2 சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர்கள் விசாரணை நடத்தினார்கள்.
குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் எப்படி வெளியே வந்தது? இதை வெளியிட்டது யார்? துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கட்ட விசாரணை முடிந்து தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்கள் அறிக்கையினை டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு அனுப்பினர். இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாணைய செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தேர்வில் முறைகேடு நடந்ததாக வந்த புகார்களையடுத்து தேர்வை ரத்து செய்ய இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, குரூப்-2 தேர்வை ரத்து செய்வதாக நட்ராஜ் அறிவித்தார். மேலும் இத்தேர்வை மீண்டும் எப்போது நடத்துவது என்பது குறித்து 10 நாளில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி: மாலைமலர்
0 comments:
Post a Comment
அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....