நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

30 July 2012

ஒலிம்பிக் வரலாறு மற்றும் கடந்து வந்த பாதை





ஒலிம்பிக் வரலாறு:

கி.மு. 776. பண்டைய கிரேக்க நாட்டின் ஒலிம்பியா நகரில் நடந்த விளையாட்டுப் போட்டியே முதலாவது ஒலிம்பிக் போட்டி என வரலாறு பதிவு செய்துள்ளது. மன்னர் எஜியஸூடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற ஹெர்குலிஸ், தமது வெற்றியின் அடையாளமாக ஒலிம்பியா என்னும் மைதானத்தை உருவாக்கியதோடு அங்கு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினார். கிரேக்க கடவுள் ஜீயஸூக்கு (Zeus) எடுக்கப்படும் திருவிழாக்காலங்களில் தான் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் 12க்கும் மேற்பட்ட கிரேக்க நகரங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அப்போதும் இந்தப் போட்டிகள், நான்கு வருடங்களுக்கு ஒருமுறைதான் நடத்தப்பட்டன. தடகள ஓட்டப்பந்தயம், மல்யுத்தம், குத்துச்சண்டை, குதிரையோட்டம், மற்றும் ராணுவ வீர விளையாட்டுகள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அங்குவசித்த அப்போலனியஸ் என்ற வரலாற்றாசிரியர் எழுதி வைத்த குறிப்புகள்தான் பண்டைய கால ஒலிம்பிக் போட்டிகள் பற்றி அறிய உதவுகிறது.

ஒலிம்பிக் போட்டிகள், எத்யேஸ் மன்னர் காலம்வரை நீடித்து வந்தது. ரோமாபுரி ஆட்சியாளர் தியோடோஷயஸின் விளையாட்டுகள் மீதான வெறுப்பினால், கி.மு 393ல், 203வது ஒலிம்பிக்ஸோடு பண்டைய ஒலிம்பிக்ஸுக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.
நவீன ஒலிம்பிக் போட்டிகள்:

அடுத்த 1500 வருடங்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளே நடக்கவில்லை. கி.பி. 1894ல் கூபர்ட்டின் என்ற பிரெஞ்சுக்காரர், டர்பனில் விளையாட்டு ஆர்வலர்களை ஒன்று திரட்டினார். நவீன ஒலிம்பிக் போட்டிகள் இந்த இடத்திலிருந்து ஆரம்பித்தன. புராதன கால ஒலிம்பிக்ஸ் போலவே நவீன ஒலிம்பிக் போட்டிகளும் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1896 ஏப்ரல் 6-ல் கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸ் மைதானத்தில், முதல் நவீன ஒலிம்பிக் போட்டியை மன்னர் ஜார்ஜ் தொடக்கி வைத்தார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட வில்லை.

தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ் என 43 போட்டிகள் நடைபெற்றன. கி.மு 490ல், நடந்த மாரத்தான் போரில் வென்ற வெற்றிச் செய்தியை மராத்தான் நகரிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள ஏதென்ஸுக்கு ஓடி வந்து சொன்ன கிரேக்க வீரர், மகிழ்ச்சியான செய்தி, தோழர்களே! நாம் வென்றோம்!" என்று கூறி, உயிர் துறந்தார். இவருடைய நினைவாக மாரத்தான் என்ற ஓட்டப்பந்தயமும் சேர்க்கப்பட்டது. முதல் பரிசாக வெள்ளிப் பதக்கமும் இரண்டாவது பரிசாக வெண்கலப் பதக்கமும் அளிக்கப்பட்டன.

இரண்டாவது ஒலிம்பிக்ஸில் (பாரிஸ், 1900) கிரிக்கெட், புறாவைத் துப்பாக்கியால் சுடுதல் போன்ற விளையாட்டுகள் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டு பிறகு அடுத்த ஒலிம்பிக்ஸிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன. மூன்றாவது ஒலிம்பிக்ஸிலிருந்து (செயிண்ட் லூயிஸ், 1904) முதலில் வெற்றி பெறுபவர்களுக்குத் தங்கப் பரிசு கொடுக்கப்பட்டது. 1896 முதல் 2008 வரை 29 ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்றுள்ளன. உலகப் போர் காரணமாக 1940, 1944 ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் நடக்கவில்லை.

ஐந்து வளையங்கள்:

அனைத்து மக்களிடையே விளை யாட்டு நட்புறவைக் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டவை - ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட ஐந்து வளையங்கள். இந்த 5 வளையங்களும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் (வட மற்றும் தென்) அமெரிக்கா எனும் ஐந்து கண்டங்களைக் குறிப்பிடுவதாகும். ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு நிறமுடையவை. அவையாவன நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை மற்றும் சிகப்பு.

ஒலிம்பிக் தீபம்:

பழங்கால மற்றும் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடர்பை உணர்த்தும் ஜோதியாக ஒலிம்பிக் தீபம் இருக்கிறது. ஒலிம்பிக்ஸ் தீப்பந்தம் கிரேக்கத்தில் உள்ள ஒலிம்பியா நகரில் சூரியக் கிரணங்களால் பற்ற வைக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாட்டுக்கு எடுத்து வரப்படுகிறது.

ஒலிம்பிக் வரலாற்றுத் துளிகள்:
  • 1936ல் ஜெர்மனியில் ஹிட்லர் மேற்பார்வையில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பின அத்லெட் வீரரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். தங்க வென்ற அத்தனை பேரையும் பார்த்துப் பேசிய ஹிட்லர் ஜெஸ்ஸி ஓவன்ஸை மட்டும் கண்டு கொள்ளவேயில்லை. ஓவன்ஸுக்கு ஏற்பட்ட அவமானத்தால் கறுப்பர்கள் அடைந்த வலி 1968 மெக்ஸிகோ ஒலிம்பிக்ஸில் வெளிப்பட்டது. 200மீ ஓட்டப் பந்தயத்தில் கறுப்பின அமெரிக்கர்களான ஸ்மித்தும் கார்லோஸும் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். பரிசு வாங்க வரும்போது இருவரும் கறுப்புப் பட்டையை அணிந்து, அமெரிக்க தேசிய கீதம் ஒலித்தபோது கறுப்பு க்ளவுஸ் அணிந்த கைகளை உயர்த்திக் காட்டி தங்கள் கோபத்தை உலகுக்குக் காட்டினார்கள்.
  • 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியின்போது, ரஷ்ய ராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்ததைக் கண்டித்து மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகியது அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும்.. இந்த போட்டியில் 80 நாடுகள் மட்டுமே பங்கெடுத்தன,
  • 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில், மாஸ்கோ ஒலிம்பிக்கை (1980) புறக்கணித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோவியத் யூனியனும் அதன் 13 தோழமை நாடுகளும் அமெரிக்கா ஒலிம்பிக்கை புறக்கணித்தன. அதற்கு ரஷ்யா சொனன காரணம் தன் நாட்டு வீரர்களின் பாதுகாப்பில் சந்தேகங் கள் இருக்கின்றன என்று.
  • 1988 சியோல் ஒலிம்பிக்ஸில், 1920-ல் ஏற்றப்பட்ட கொடியைதான் 1984-ம் ஒலிம்பிக் வரை பயன்படுத்தினர்.இந்த ஒலிம்பிக்கில் தான் பழைய கொடி மாற்றப்பட்டது. புதிய கொடி ஏற்றப்பட்டது. டேபிள் டென்னிஸ் முதன் முறையாக நடத்தப்பட்டது,
  • 1992 ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் 25வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. சோவியத் யூனியன் சிதறிய நிலையில், ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் சேர்ந்து "ஒருங்கிணைந்த அணி' என்ற பெயரில் பங்கேற்றன. மேற்கு, கிழக்கு ஜெர்மனி இணைந்த நிலையில், ஒன்றுபட்ட ஜெர்மனியாக களமிறங்கியது. 32 ஆண்டு தடைக்கு பின் தென் ஆப்ரிக்கா பங்கேற்றது சிறப்பம்சம். துவக்க விழாவில் மாற்றுத்திறனாளியான அன்டோனியோ ரிபல்லோ மிகவும் வித்தியாசமாக அம்பு மூலம் ஜோதியை ஏற்றி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்
  • 1996 ஏதென்சில் ஒலிம்பிக்ஸில், 1896ல் நவீன ஒலிம்பிக் துவங்கியது. இதன் அடிப்படையில் அமெரிக்காவின் அட்லாண்டாவில் 1996ல் நடந்த 26வது ஒலிம்பிக், நூற்றாண்டு போட்டியாக கொண்டாடப்பட்டது. முதல்முறையாக பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை (10,320) ஐந்து இலக்கை தொட்டது. அமெரிக்க அதிபர் கிளிண்டன் போட்டிகளை துவக்கி வைத்தார். குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். முதல் 8 நாட்கள் போட்டிகள் சிறப்பாக நடந்த நிலையில், 9வது நாளில் ஒலிம்பிக் நூற்றாண்டு பார்க்கில் "பைப்' குண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 111 பேர் காயமடைந்தனர். 
  • 2000 ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 27 வது ஒலிம்பிக் போட்டி மிக பிரமாண்டமாக நடந்தது. சுமார் 10,651 வீரர், வீராங்கனைகள் பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உறுப்பினராக உள்ள 200 நாடுகளில், 199 நாடுகள் பங்கேற்று சாதனை படைக்கப்பட்டன. தடை காரணமாக ஆப்கானிஸ்தான் மட்டும் பங்கேற்கவில்லை
    ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பளுதூக்குதல் பிரிவில் பெண்கள் பங்கேற்றனர். இந்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்தினார் ஆந்திராவை சேர்ந்த "இரும்பு பெண்' கர்ணம் மல்லேஸ்வரி. ஏற்கனவே, உலக சாம்பியன், ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றிருந்த இவர், சிட்னியில் மீண்டும் திறமை நிருபித்தார். 69 கி.கி., எடைப்பிரிவில் அசத்திய மல்லேஸ்வரி வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற மகத்தான சாதனை படைத்தார்.
    சிட்னி 2000, ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் எத்தியோப்பியாவின் கெசாக்னி அபேரா, தெஸ்பாயி டோலா மற்றும் கென்யாவின் எரிக் வெனைனா மத்தியில் பலத்த போட்டி நிலவியது. மிகவும் களைப்படைந்த டோலா தன்னால் வெனைனாவை முந்த இயலாது என்பதை புரிந்து கொண்டார். உடனே சக வீரரான அபெராவை அழைத்து இன்னும் வேகமாக ஓடும்படி கேட்டுக் கொண்டார். 22 வயதான அபேராவும் அதிவேகமாக ஓடி தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் மிக இளம் வயதில் மாரத்தானில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை அபேரா பெற்றார்.
  • 2004 ஏதேன்ஸ், ஒலிம்பிக் பிறந்த பூமியான கிரீஸ் தலைநகர் ஏதென்சில் 28வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. 201 நாடுகளை சேர்ந்த 10,625 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பாரம்பரிய கிரேக்க கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக, துவக்க விழா அமைந்தது. ஜோதியை கிரீஸ் வீரர் நிக்கோலஸ் கக்லமனாகிஸ் ஏற்றி வைத்தார்.
    துப்பாக்கி சுடுதல் "டபுள் டிராப்' பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்  ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். இதன் மூலம் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதலாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றிய இவர், காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷப் போட்டிகளில் திறமையை நிருபித்தார். ஏதென்ஸ் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று கோடிக்கணக்கான இந்திய உள்ளங்களை மகிழச்செய்தார்.
  • 2008 சீனத்தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்தியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. முக்கிய போட்டிகள் நடந்த பீஜிங் தேசிய மைதானம் பறவை கூடு போல அழகாக வடிவமைக்கப்பட்டது. "டன்' கணக்கில் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த "பேர்ட்ஸ் நெஸ்ட்' மைதானம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சீன ஜிம்னாஸ்டிக் வீரரான லீ நிங், அரங்கத்தின் உயரமான பகுதியில் இருந்து கயிறு மூலம் பறந்து வந்து ஜோதியை ஏற்றினார். சீனா 51 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்தையும், அமெரிக்கா 36 தங்கத்துடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
    10 மீ., துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற சேர்ந்த அபினவ் பிந்த்ரா(29), தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் சுஷில் குமார், குத்துச்சண்டையில் விஜேந்தர் ஆகியோர் வெண்கலம் வென்றனர். 2008 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெண்கலம் வென்று 50வது இடம் பிடித்தது.
    எட்டு தங்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ஸ் மிக அதிகமான தங்கம் வென்ற நட்சத்திர வீரர். ஆப்கனிஸ்தான், தஜிகிஸ்தான், பஹ்ரைன், மொரிசியஸ், சூடான், டோகா போன்ற நாடுகள் வரலாற்றின் முதல் ஒலிம்பிக் பதக்கம் பெற்று சாதனை படைத்தன.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்...

இந்த பிளாக் பற்றிய உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....