நம்ம ஊருக்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடு வரவேற்கிறேன். என் நட்புக்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ...

27 January 2012

முதலுதவி அளிக்க கற்றுக்கொள்வோம் பாகம் - 2


முதலுதவி அளிப்பதற்கு சில பொதுவான விதிகள் இருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியை பார்ப்போம்.

மயக்கம்
:
 


மூளைக்குப் போய்ச் சேர வேண்டிய ரத்தம் போதிய அளவு போகாமல் போனால் மயக்கம் ஏற்படுகிறது. குறுகிய காலம் மட்டுமே இது ஏற்படும்.
மயக்கத்தால் பெரிய ஆபத்து இல்லை என்று சொல்லி விட முடியாது. எதற்காக மயக்கம் ஏற்பட்டது என்பதை உணர முடியாத பட்சத்தில் உடனடி மருத்துவ உதவி பெற வே ண்டியது அவசியம்.


எப்படிச் சமாளிக்கலாம்?

  1. பின்புறமாக சாய வைக்கலாம். கால்களை உயர்த்தி விடுவது நல்லது.
  2. காற்றுக் குழாயைச் சரிபார்க்கவும். வாந்தி வருகிறதா என்று கவனிக்கவும்.
  3. சுவாசம், இருமல் போன்றவை இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லையென்றால் சிறிசிஸி ஐத் தொடங்கவும். தகுந்த உதவி வரும் வரை அல்லது பாதிக்கப்பட்டவரின் நிலைமை சீராகும் வரை சிறிசிஸிஐத் தொடரவும்.
  4. தலை மட்டத்தை விட உயரமாகக் காலை உயர்த்தவும். இப்படிச் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும், இறுக்கமாக உடைகளைத் தளர்த்துங்கள். ஒரு நிமிடம் அவகாசம் கொடுத்துப் பாருங்கள். விழித்துக் கொள்ளவில்லை என்றால் அவசர சிகிச்சைப் பிரிவை நாடவும்.

அதீத ரத்தப் போக்கு
:

பாதிக்கப்பட்டவரின் ரத்தப் போக்கை நிறுத்த முயற்சி செய்வதற்கு முன்னால் உங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்வது நல்லது. முடிந்தால், கையுறை அணிந்து கொள்ளுங்கள். கிருமிகள் தொற்றிக் கொள்வதைத தவிர்க்கலாம். ஏதேனும் பாகங்கள் பிதுங்கி வெளியில் வந்து விட்டால் அவற்றை மீண்டும் உள்ளே தள்ள முயற்சி செய்ய வேண்டாம். கட்டுப்போட்டு மட்டும் வைக்கவும். தவிரவும்,
கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

  1. கீழே படுக்க வைக்கவும். உடலைவிட தலையைச் சற்றுத் தாழ்த்தி வைப்பது நல்லது. கால்களையும் உயர்த்தி வைக்கவும். இப்படிச் செய்தால் ரத்தம் மூளைக்குள் வேகமாகப் பாய்ந்தோடுவதைத் தடுக்கலாம். எந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகுகிறதோ அந்த இடத்தைக் கொஞ்சம் உயர்த்தியது போல் தூக்கி வைத்தால் நல்லது.
  2. கையுறை அணிந்து கொண்டபின், காயத்திலுள்ள அழுக்குகளை நீக்கலாம். உள்ளே குத்திக் கிடக்கும் பொருளை பலவந்தமாக இழுக்க முயலக்கூடாது. காயத்தைச் சுத்தப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.
  3. ரத்தம் வரும் இடத்தை அழுத்திப் பிடிக்க வேண்டும். கட்டுப்போட்டு நிறுத்தலாம். அல்லது கையுறை அணிந்த கையால் அழுத்திப் பிடிக்கலாம்.
  4. ரத்தப் போக்கு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
  5. கட்டுப்போட்ட பின்னும் ரத்தப் போக்கு தொடர்ந்தால் கட்டைப் பிரிக்க முயற்சி செய்ய வேண்டாம்.
  6. ரத்தப் போக்கு நிற்காத பட்சத்தில் குருதிக் குழாயை (arteries & veins) அழுத்திப் பிடிக்கலாம். முழங்கைக்கும், அக்குளுக்கும் இடைப்பட்ட பகுதியில் கைக்கு உண்டான குருதிக் குழாய் உள்ளது. காலுக்கான குருதிக் குழாய் முட்டிக்கும், இடுப்புக்கும் மத்தியில் உள்ளது. இவற்றை அழுத்திப் பிடிக்கலாம்.
  7. ரத்தப்போக்கு நின்றுவிட்டதே என்பதற்காக போட்டு வைத்திருந்த கட்டைப் பிரிப்பது சரியல்ல. உடனடியாக, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
  8. உட்புறமாக ரத்தக் கசிவு இருந்தால் அவசர சிகிச்சைப் பிரிவை அணுகுவது தான் ஒரே வழி.
    சில அறிகுறிகள்
    • காது, மூக்கு, மலக்குடல், பெண்ணின் கருப்பை, வாய்க்குழாய் போன்ற பகுதிகளிலிருந்து ஏற்படும் ரத்தக் கசிவு.
    • இருமும் போது, வாந்தி எடுக்கும் போது ரத்தம் வெளிப்படுதல்.
    • கழுத்தில், மார்பில், அடி வயிறு போன்றவற்றில் அடிபட்டால் ரத்தம் கசிதல்.
    • மார்பு, வயிறு, மண்டை ஓட்டை ஊடுருவி அடிபட்டால்

அதிர்ச்சி
:

அதிர்ச்சி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உதாரணமாகச் சொல்லலாம். இழப்பு, அலர்ஜி, தொற்று, இன்னபிற. அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களை இனம் காண சில அடிப்படைகள்.

  • தோல் ஜில்லிட்டு இருக்கும். வெளுத்துப் போய் காணப்படும்.
  • நாடித் துடிப்பு குறையும். சுவாசம் சீராக இருக்காது. அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். 
  • ரத்த அழுத்த அளவு குறையும்.
  • கண்கள் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருக்கும். கண் விழி அகன்று இருக்கும்.
  • மயக்கமடைந்த நிலையிலோ அல்லது விழிப்புடனோ இருப்பார்கள். விழிப்புடன் இருந்தால், குழப்பத்துடன், வலுவிழந்து காணப்படுவர். பதட்டம் அதிகரிக்கும்.

அடிபட்டதால் அதிர்ச்சியடைந்தவர்களை என்ன செய்ய வேண்டும்
?

  • மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளலாம்.
  • சாய்ந்த நிலையில் படுக்க வைக்கலாம்.
  • நாடித் துடிப்பு, இருமல், சுவாசம் இயல்பாக இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என் றால் சிறிசிஸிஐத் தொடங்கவும்.
  • தோதான நிலைக்கு அழைத்துச் செல்லவும். இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும். தாகம் என்று கேட்டால் கூடத் தண்ணீர் தர வேண்டாம்.
  • ரத்தத்துடன் வாந்தி எடுத்தால், அவரைக் கவனமாக மீட்பு நிலைக்கு எடுத்துச் செல்லவும்.
  • காயத்துக்கு மருத்துவ உதவி பெற்றுத் தரவும்.

மூக்கு வழியாக ரத்தம் கசிதல்:


பரவலான சங்கதி இது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பெரும்பாலும் மூக்கின் உட்புறத்திலிருந்துதான் ரத்தக் கசிவு ஏற்படும். வயதானவர்களுக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கும் கூட மூக்கின் உட்புறத்திலிருந்து ரத்தம் கசியலாம். அதே சமயம், ஆழமான கசிவாகவும் இருக்கலாம். இறுக்கமாகிப் போன ரத்தக் குழாய் காரணமாகவோ அல்லது அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாகவோ கூட இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம். பல சமயங்களில் இந்தக் கசிவை நிறுத்த முடியாது. தேர்ந்த மருத்துவ சிகிச்சை தேவை.

என்ன செய்யலாம்?

  • உயர்த்திய நிலையில் இருந்தால் ரத்தக் கசிவு நிற்கலாம்.
  • ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு மூக்கைக் கிள்ளுவது போல் அழுத்திப் பிடிக்கலாம். அந்தச் சமயத்தில், வாய் வழியாக சுவாசிக்கலாம்.
  • மூக்கைச் சிந்தக் கூடாது. கீழே குனியவும் கூடாது.
உடனடி அவசர சிகிச்சை எப்போது தேவைப்படும்?
  • 20 நிமிடங்களுக்கும் அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால்
  • மீண்டும் மீண்டும் ரத்தக் கசிவு ஏற்பட்டால்
  • கீழே விழுந்ததாலோ தலையில் அடிபட்டதாலோ மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டால்.

காது
:

வெளிப் பொருள்கள் காதில் சிக்கிக் கொண்டால் வலி அதிகரிக்கும். கேட்கும் திறன் குறையும். ஏதேனும் பொருள் காதில் சிக்கிக் கொண்டால், உடனடியாகக் கண்டுபிடித்து விடலாம். குழந்தைகளால் இது முடியாது.

என்ன செய்யலாம்?

  • குச்சி போன்ற பொருள்களால் காதைக் குடைவது தவறு. அப்படிச் செய்தால் சிக்கிக்கொண்ட பொருள் உள்ளே போய்விடக் கூடும்.
  • காதில் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரியும்படி இருந்தால். லாவகமாக அதை வெளியில் எடுக்க முயற்சி செய்யலாம்.
  • மெதுவாகத் தலையைச் சாய்த்துப் பொருளை கீழே விழ வைக்க முயற்சி செய்யலாம்.
  • ஏதேனும் பூச்சி புகுந்துவிட்டால், மினரல் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் காதில் மிதக்க விடலாம். காது மடலால் மெலிதாக அசைத்து அந்தப் பூச்சியை எண்ணெயில் விழ வைக்கலாம். பூச்சி மிதக்க ஆரம்பித்தவுடன் வெளியில் எடுக்க முயற்சி செய்யலாம்.
    பூச்சியைத் தவிர பிற பொருள்களை வெளியில் எடுக்க, எண்ணெயைக் காதில் ஊற்றக்கூடாது.
    அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால் மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

கண்:

வெளிப்புறப் பொருள் கண்ணில் சிக்கிக் கொண்டால்
என்ன செய்யலாம்?

  • கையைக் கழுவிக்கொள்ளவும்.
  • நன்றாக வெளிச்சம் உள்ள பகுதியில் சம்பந்தப்பட்டவரை உட்காரச் சொல்லவும்.
  • கண்ணில் சிக்கிக் கொண்ட பொருள் தென்படுகிறதா என்று பார்க்கவும். இமையை கீழ்ப்புறமாக மடக்கி அவரை மேலே பார்க்கச் சொல்லவும். மேல்புற இமையைப் பிடித்துக் கீழப்புறமாக அவரைப் பார்க்கச் சொல்லவும்.
  • கண் இமையில் அந்தப் பொருள் சிக்கியிருந்தால் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வெளியில் எடுக்கலாம்.

கவனம்:


  • கருவிழியில் சிக்கியிருக்கும் பொருளை வெளியில் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.
  • கண்ணை கசக்க வேண்டாம்.

அவசர சிகிச்சை எப்போது பெறலாம்
?

  • வெளியில் எடுக்க முடியாத பட்சத்தில்
  • கரு விழியில் சிக்கிக் கொண்டால்
  • பார்வை சரிவரத் தெரியாமல் அவர் அவதிப்பட்டால்
  • வலி இருந்தால்
  • சிக்கிக் கொண்ட பொருளை வெளியில் எடுத்த பின்னும் எரிச்சல் இருந்தால்

மூக்கு:

வெளிப்புறப் பொருள் மூக்கில் நுழைந்துவிட்டால்

  • உபகரணங்களைக் கொண்டோ, பஞ்சைக் கொண்டோ வெளியில் அகற்ற முயல வேண்டாம்.
  • மூச்சை உள்ளிழுக்க வேண்டாம். வாய் வழியாக சுவாசிக்கலாம்.
  • மெதுவாக மூக்கைச் சிந்துவதன் மூலம் பொருளை வெளியேற்றலாம். கண்ணுக்குத் தெரியும் பொருளாக இருந்தால் Tweezers (கிடுக்கி) கொண்டு வெளியில் அகற்றலாம்.
  • முயற்சி தோல்வியடைந்தால், உடனடி மருத்துவ உதவி அவசியம்.

தோல்:

தோலில் ஏதேனும் குத்தி விட்டால்
, ஜிஷ்மீமீக்ஷ்மீக்ஷீs கொண்டு அகற்றலாம் குத்திய இடத்தை சோப், தண்ணீர் கொண்டு கழுவலாம்.

தோலை ஊடுருவி முழுமையாக உள்ளே சென்றுவிட்டால்?

  • சோப், தண்ணீர் விட்டுக் கழுவவும்.
  • நெருப்பில் காட்டப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை எடுத்துக் கொள்ளவும்.
  • மெலிதாக தோலில் செருகி, குத்திய பொருளை மேல்நோக்கி நகர்த்தலாம்.
  • தென்பட்டு விட்டால், பொருளை வெளியில் எடுத்து விடலாம். சில சமயம், பெரிதுபடுத்திக் காட்டும் பூதக் கண்ணாடி தேவைப்படலாம்.
  • குத்தப்பட்ட பகுதியைக் கழுவி காயவிடவும். ஆன்டிபயாடிக் களிம்பு தடவலாம்.
  • இயலவில்லை என்றால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

0 comments:

Post a Comment

அழகிய முறையில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்....